நுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சி (PKC)

நுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சி (PKC), நுண்குமிழ் கண்சவ்வழற்சி, நுண்குமிழழற்சி, அல்லது நுண்குமிழ் கண் நோய் என அழைக்கப்படும் இந்நோய் ஒரு விளைவியத்தினால் ஏற்பட்ட ஓர்  உள்ளார்ந்த வகை IV தாமதமான அதியுணர்வு (T செல்லால் செயலூக்கம் பெற்ற) ஒவ்வாமை மறுவினையாகும். இந்த அழற்சி நோயால் ஒளிக்கூச்சமும் சளிக் கசிவும் ஏற்படும். மேற்திசு சார் நுண்குமிழ்கள் இந்நோயால் உண்டாகும்.  இவை தனியாக அல்லது பலவாக இருக்கும். சாம்பல் வெண் நிறத்தில் காணப்படும். இவை மேலெழுந்த கண்சவ்வு அல்லது வெண்படல  கரடுகள் ஆகும். பொதுவாக லிம்பசில் அல்லது அதன் அருகில் உருவாகும்.  இதைச் சுற்றி ஒரு விரிவடைந்த குருதியூட்ட மிகைப்பு மண்டலம் காணப்படும்.

பழமையான கிரேக்க மற்றும் அரேபிய எழுத்துப் பதிவுகளில் நுண்குமிழ் நோய் பற்றிய விவரங்கள் உள்ளன (Thygeson P. The etiology and treatment of phlyctenular keratoconjunctivitis. Am J Ophthalmol. 1951; 34:1217-36). கிரேக்கச் சொல்லான ‘ஃபிளைக்ட்டேனா’ என்பதற்குக் கொப்புளம் என்பது பொருள். இவ்வேர்ச்சொல்லில் இருந்தே இச்சொல் உருவாகியது. குழந்தைகளிலும் இளவயதினரிடையேயும் இந்நோய் அதிகமாகக் காணப்படுவதாக சோர்ஸ்பியும் தைகீசனும் கருதுகின்றனர் (Sorsby A. The etiology of phlyctenular ophthalmia. Br J Ophthalmol. 1942; 26: 159-79).

PKC –யின் பொதுவான காரணம் டியூபர்குலோ புரதத்துக்கு எதிரான அதியுணர்வு மறுவினையே ஆகும்.  குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் இந்த நிலை உள்ளது. ஏனெனில் இங்கு மைக்கோபேக்டீரியம் டியூபர்குலோசிஸ் இடம்சார்ந்து காணப்படுகிறது. இருப்பினும், ஸ்டெப்லோகாக்கஸ் ஆரியஸ், ப்ரொப்பியோனிபாக்டீரியம் அக்னஸ், கிளமைதியா, ஒட்டுண்ணி தொற்று, காளான்தொற்று, மற்றும் அண்மையில்,  HLA துணைவகைகளான A26, B35, & DR8 ஆகியவைகளும் காரணம் என நிருபிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய்களுக்குக் காரணமான ஊட்டச்சத்தின்மை, மிகைக்கூட்டம், சுகாதாரமின்மை, ஆகியவையும் பிற ஆபத்துக் காரணிகள். பெண்களுக்கு இது சற்று அதிகமாக ஏற்படுகிறது என்று கணிக்கப்பட்டாலும் இது முக்கிய நோயியலைப் பொறுத்து அமையும். இந்நோயால் பார்வை இழப்பு ஏற்படாவிட்டாலும் பார்வை பாதிக்கப்படும்.

குறிப்புகள்:

Sihota Ramanjit, Tandon Radhika. Parson's Diseases of the Eye. Reed Elsevier India Private Limited. 22nd Edition. 2015. P. 181-182

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology. Jaypee- Highlights Medical Publishers (P) Ltd. 2012. P. 136-138.

Khurana A. K. Ophthalmology. New Age International (P) Limited. Third edition. 2003. P. 102-104.

Kalevar V. Clinical Ophthalmology. Ane Books India. 2008. P. 123-124.

http://www.nichigan.or.jp/jjo-oj/pdf/04402/044020146.pdf

http://medind.nic.in/jac/t10/i2/jact10i2p127.pdf

http://www.ijdvl.com/article.asp?issn=0378-6323;year=2006;volume=72;issue=4;spage=290;epage=292;aulast=Singal

http://www.ejournalofophthalmology.com/ejo/ejo54.html

Olitsky Scott E, Nelson Leonard B. Pediatric Clinical Ophthalmology- A color Handbook. Mansion Publishing Ltd. P. 82.

Copeland Jr Robert A, Afshari Natalie A. Copeland and Afshari’s Principles and Practice of CORNEA Vol.1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P. 404-408.

Foster C Stephen, Azar Dimitri T, Dohlman Claes H. Smolin and Thoft’s The CORNEA- Scientific Foundations & Clinical Practice. Lippincot Williams & Wilkins. Fourth Edition. 2005. P.509-513.

BenEzra David. Blepharitis and Conjunctivitis: Guidelines For Diagnosis And Treatment. Editorial Glosa. International Ocular Inflammation Society. 2006. P. 122-124.

Saxena Sandeep. Clinical Ophthalmology: Medical and Surgical Approach. Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2011. P. 59-61.

Basak Samar K, Atlas of Clinical Ophthalmology, 2nd ed. Jaypee Brothers Medical Publishers (P) Ltd, 2013, New Delhi, P. 53.

Thygeson P. The etiology and treatment of phlyctenular keratoconjunctivitis. Am J Ophthalmol. 1951; 34:1217-36.

Culbertson WW, Huang AS, Mandelbaum SH, et al. Effective treatment of phlyctenular keratoconjunctivitis with oral tetracycline. Ophthalmology 1993; 100: 1358-66.

Sorsby A. The etiology of phlyctenular ophthalmia. Br J Ophthalmol. 1942; 26: 159-79.

Suzuki T, Sano Y, Sasaki O, et al. Ocular surface inflammation induced by Propionibacterium acnes. Cornea. 2002; 21: 812-7.

Suzuki T, Mitsushi Y, Yoichiro S, et al. Phlectenular keratitis associated with meibomitis in young patients. Am J Ophthalmol. 2005; 140: 77-82.

 • கண்சவ்வு சிவப்பு
 • அரிப்பு
 • நீரொழுகல்
 • அசௌகரியம்
 • வலி
 • உறுத்தல்
 • நுண்குமிழ்
 • ஒளிக்கூச்சம்
 • பார்வைக் குறைவு

நுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சி (PKC), ஒரு விளைவியத்தினால் ஏற்பட்ட ஓர்  உள்ளார்ந்த வகை IV தாமதமான அதியுணர்வு (T செல்லால் செயலூக்கம் பெற்ற) ஒவ்வாமை மறுவினையாகும். 5-12 வயது ஊட்டச்சத்தற்ற பலவீனமான  குழந்தைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இவர்கள் தொண்டை வீக்கம்,, மூக்கு அடிச்சதை மற்றும் கர்ப்பப்பை வாய் நிணச்சுரப்பிப்புற்று நோய்களால் துன்புறுகின்றனர்.

பி.கே.சி. உருவாகப் பல நோயியல் காரணிகள் உள்ளன.

நுண்ணுயிரிகள்:

 • மைக்ரோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ்
 • ஸ்டெப்லோக்கஸ் ஆரியஸ்
 • புரொப்பியானிபாக்டீரியம் ஆக்னஸ்
 • கிளமைதியா டிராக்கோமேட்டிஸ்

ஒட்டுண்னிகள்:

 • அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்டு
 • அன்சைலோஸ்டோமா டுடனேல்
 • ஹைமெனோலெப்சிஸ் நானா
 • எண்டமோபா ஹிஸ்ட்டோலிட்டிக்கா

காளான்கள்:

 • கான்டிடா அல்பிகான்
 • காக்கிடயோய்டெஸ் இமிட்டிஸ்

மானிட வெள்ளணு விளைவியம் (HLA)துணைவகைகள்:

 • A26.
 • B35.
 • DR8.

மெய்போமிட்டிஸ்:

நுண்குமிழ் வெண்படல அழற்சி மெய்போமிட்டிசோடு தொடர்புடையதாக இருக்கலாம் ( Suzuki T, Mitsushi Y, Yoichiro S, et al. Phlectenular keratitis associated with meibomitis in young patients. Am J Ophthalmol. 2005; 140: 77-82).

மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ்

உலகம் முழுவதும் பி.கே.சியின் மிகவும் முக்கியக் காரணம் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் ஆகும். வளர்ந்துவரும் நாடுகளிலும் இதுவே நிலை. இங்கு காசநோய் இடம்சார்ந்து காணப்படுகிறது. பி.கே.சி. ஏற்படக்கூடிய நிலைகள்:

 • காசநோய்  செயல்திறனோடு அல்லது செயலற்று காணப்படும் நோயாளிகளில்.
 • தூய்மைப்படுத்திய புரதத் தோன்றல்  (PPD) சோதனை அல்லது எக்ஸ்-கதிர் சோதனையில் நேர்மறை முடிவு பெற்ற மருத்துவ வரலாறு.
 • குடும்பக் காசநோய் வரலாறு.
 • காசநோய் உருவாகும் வாய்ப்புள்ள மருத்துவ சிகிச்சைக்கு முந்திய நோயாளிகள்.

காசநோயோடு தொடர்புடைய நுண்குமிழ்நோய் பிற காரணங்களால் ஏற்பட்ட நோயை விட அதிக அறிகுறிகளோடு காணப்படும். திரும்பத்திரும்ப வரும். பல குமிழ்களோடு பொதுவாக உருவாகும். பாதி நேர்வுகளில் இருபக்க பாதிப்பாக இருக்கும். ஆனால் ஒருபக்கமாகவும் ஏற்படலாம். கண் திசுக்களில் இருந்து இதுவரை எம்.டியூபர்குலோசிஸ் தனிமைப்படுத்தப் படவில்லை. இருப்பினும் முறைப்பரிசோதனை மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்டேபிலோகாக்கஸ் ஆரியஸ்:

வளர்ந்த நாடுகளில் இதுவே பரவலான காரணம். மெய்போமியன் சுரப்பி செயலிழப்பு அல்லது நீடித்த ஸ்டேபிலோகாக்கஸ்  இமைகண்சவ்வழற்சி நோயாளிகள் பாதிக்கப்படக் கூடும். பரிசோதனை மற்றும் நுண்ணுயிர் வளர்ப்பு சோதனை மூலம் நோய்கண்டறியப்படும். காசநோய் சார் பி.கே.சி.யோடு ஒப்பிடும்போது இது அரிதும் கடுமையற்றதும் ஆகும்.

புரொப்பியானிபாக்டீரியம் கொப்புளங்கள்

இவையும் கண்பரப்பு அழற்சியோடு இணைந்தவையே (Suzuki T, Sano Y, Sasaki O, et al. Ocular surface inflammation induced by Propionibacterium acnes. Cornea.2002; 21: 812-7). மருத்துவ பரிசோதனை மற்றும் நுண்ணுயிர் வளர்ப்பு முறையில் நோய்கண்டறிதல் மேற்கொள்ளப்படும்.

குடற்புழுத் தொற்று:

பிற ஒட்டுண்ணிகளை விட இத்தொற்று மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. முக்கியமாக இவை லிம்பசையும் வெண்படலத்தையும் பாதிக்கும். கண்சவ்வு பாதிப்படைவதில்லை. அமிலச்சாய செல் பதில்வினையால் தாமத மிகைஉணர் எதிர்வினை உருவாகும். எதிர்குடற்புழு சிகிச்சையால் நோய் விரைவில் குணமாகும்.

மரபியல் தொடர்பு:

பி.கே.சிக்கு மரபியல் தொடர்பு இருப்பதாக சுசுக்கி மற்றும் பிறர் கருதினர். இவற்றில் மானிட வெள்ளணு விளைவிய துணைவகைகள் (HLA) A26, B35, DR8.அடங்கும். இவை வெண்படலதுணையர் T வெள்ளணு வகை I எதிர்வினையில் குறிப்பிட்ட பங்காற்றுகின்றன. இதனால் நுண்குமிழ் புண்கள் உருவாகும்.

மெய்போமிய அழற்சி:

பெண் நோயாளிகளுக்கு ஏற்படும் மெய்போமிய அழற்சியோடு நுண்குமிழ்நோயை சுசுக்கியும் பிறரும் தொடர்பு படுத்தினர் (Suzuki T, Mitsushi Y, Yoichiro S, et al. Phlectenular keratitis associated with meibomitis in young patients. Am J Ophthalmol. 2005; 140: 77-82). பால் ஊக்க இயக்குநீர் ஏற்பிகளின் வெளிப்பாடுகளோடு கண்பரப்புக்கு உள்ள தொடர்பை அவர்கள் எடுத்துரைத்தனர். ஆகவே மெய்போமிய அழற்சிக்கு அடுத்ததாகப் பி.கே.சி. பெண்களுக்கு உண்டாகலாம்.

நோய்க்குக் காரணமான உயிரியைப் பொறுத்து மருத்துவ அறிகுறிகள் மிகுதியாக வேறுபடும். கண்சவ்வு, வெண்படலம் அல்லது லிம்பசில் இது ஒருகண்ணில் அல்லது இரு கண்ணிலும் உண்டாகும். இமைசார் கண்சவ்வில் நுண்குமிழ் மிக அரிதாகவே ஏற்படும். அண்மையில் நுண்ணுயிரி, ஒட்டுண்ணி அல்லது காளான் தொற்று ஏற்பட்ட அறிகுறியற்ற நோயாளிகளில் நுண்குமிழ்நோய் தற்செயலாகவே கண்டறியப்படலாம்.

நுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சி அல்லது நுண்குமிழ் கண்சவ்வழற்சி என நுண்குமிழ்நோய் தொடங்குகிறது. வெறும் வெண்படல அழற்சியாக இந்நோய் அரிதாகவே தொடங்கும். நுண்குமிழ் கண்சவ்வழற்சி இமைசார் கண்சவ்வை விட குமிழ் கண்சவ்விலேயே அதிகமாகக் காணப்படுகிறது. இதில் குழல்மிகுப்பும் சிறிது கசிவும் இருக்கும். அறிகுறிகள் மென்மையாகவும், சிலருக்கு அறிகுறிகளே இல்லாமலும் இருக்கும். கண்சவ்வில் மட்டுமே உருவாகும் இந்நோய் இரண்டு வாரங்களில் தானாகவே குணமாகும்.

சிறு வட்டமான, மேலெழுந்த, சாம்பல் அல்லது மஞ்சள் நிற மேற்புறத் திசு சார்ந்த எழுச்சியாக கண்சவ்வு, லிம்பஸ் அல்லது வெண்படலத்தில்  பி.கே.சி. உருவாகும். இவை குழல்மிகைப்புப் பகுதியின் அருகில் காணப்படும். பெரும்பாலும் லிம்பஸ் பாதிக்கப்படும். இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இவை புண்ணாகி  ஆப்பு வடிவ நார்க்குழல் வடுவாக லிம்பஸ் அல்லது வெண்படலத்தில் தங்கும். வெண்படலக் குமிழ் நோய் வடு உண்டாக்குவதில்லை.

கண் மருத்துவர் பிளவு விளக்கின் உதவியோடு இநோயைக் கண்டறிகிறார்.

பி.கே.சி.யின் மருத்துவ அறிகுறிகள்:

 • கண்ணிமையழற்சி
 • மெல்போமிய அழற்சி
 • கண்சவ்வு அல்லது வெண்படல அழற்சி
 • கண்சவ்வு அல்லது கண்கோள மேலடுக்கு ஊசி
 • வீங்கிய மிகைப்பு இரத்தக் குழல்கள் சூழ்ந்த மேற்திசு சார் கண்சவ்வு அல்லது வெண்படல கரணைகள்
 • புள்ளி மேற்திசு வெண்படலநோய்
 • மரைபடலம்
 • நசிவு மற்றும் ஊடுறுவும் புண்
 • ஆப்பு வடிவ நார்க்குழல் வடு

நுண்குமிழ்நோய் வடிவங்கள்:

 • அலைகுமிழ்: இது இந்நோயின் குறிப்பிடத்தக்க  வடிவமாகும். லிம்பல் நுண்குமிழ் வெண்படலத்தின் குறுக்கே மையத்துக்கு அருகிலும் லிம்பசுக்கு செங்குத்தாகவும் பரவி மேலோட்டமான மற்றும் குழல் வடுக்களை உருவாக்கும்.
 • விளிம்புப் புண்கள்: குமிழ்கள் லிம்பசில் தொடங்கி வெண்படலத்தை நோக்கிப் பரவும். ஆனால் இவை லிம்பசுக்கும் புண்களுக்கும் இடையில் தெளிவான இடைவெளியை விடுவதில்லை.
 • சிதறிய மைய வடிவம்: புண்கள் அற்ற இவ்வடிவம் பொதுவாக தொடர் நோயில் காணப்படும். இதனால்  குழல்களின் மேலோட்டமான அல்லது ஆழமான உள்வளர்ச்சி இருக்கும்.
 • மரைபடலம்:  பி.கே.சியில் உருவாகும் மரைபடலத்தைச் சிதறிய மைய ஊடுறுவிகளைக் கொண்டும் லிம்பசில் இருந்து வெண்படலத்துக்கு நேரடியாகச் செல்லும் குழல்களைக் கொண்டும் கண்ணோய் மரைபடத்தில் இருந்து வேறுபடுத்திக் காணலாம்.
 • நுண் நோய்: வெண்படலப் பரப்பைப் புலனாகா அதிநுண் குமிழ்கள் மூடும்.

திசு ஆய்வு:

நுண்குமிழ்கள் சார் புறத்திசு ஊடுறுவிகள் ஆகும். இவற்றில் ஹிஸ்ட்டோசைட்டுகள், லிம்போசைட்டுகள், பிளாஸ்மா செல்கள் நியூட்ரோபில்கள் மற்றும் லேங்கர்ஹேன்ஸ் செல்கள் இருக்கும். இந்த கரணை ஊடுறுவிகளின் மேல் காணப்படும் அடி மேல்திசுவில் மோனோநியூகிளியார் பேகோசைட்டுகள், நியூட்ரோபில்கள் மற்றும் லேங்கர்ஹேன்ஸ் செல்கள் இருக்கும்.

நுண்குமிழ் ஊடுறுவிகளில் பெரும்பாலும் ஒற்றை வெள்ளணுக்கள் ஆகும். இவற்றின் தாமதமான அதியுணர்திறன் பதில்வினையே நுண்குமிழ் ஊடுறுவிகளில் உண்டாகும் அழற்சி. ஒரு முக்கோணப் பகுதியில் சார் புறத்திசு ஒற்றைக்கரு ஊடுறுவலை ஏற்படுத்துவது இதன் தனித்தன்மை ஆகும். இதன் மேல் பகுதி வெண்படலத்தின் ஆழ் அடுக்குகளை நோக்கி இருக்கும். திசுவலை இரத்தக் குழாய்களைச் சுற்றி புறத்திசு ஒற்றைக்கரு, பன்னடுக்குக்கரு வெள்ளணுக்களும் அமிலச்சாய செல்களும் அமைந்திருக்கும். குழல்களைச் சுற்றி இருக்கும் ஊடுறுவிகள் இரத்த விழுங்கணுக்களாக உருமாறுகின்றன. பின் இறுதியாக சிறுநரம்பிழை செல்களாக உருமாறி ஒற்றைப் போலிகை எதிர்பொருட்களோடு எதிர்வினை புரிகின்றன. உதவுநர் மற்றும் தூண்டுநர் T-நிணநீர்செல்கள் உணர்வூட்டப்பெற்று செயலூக்கம் பெற்ற T-செல்களை உற்பத்திசெய்கின்றன. இறுதியாக லிம்போகைன்கள் வெளியாகின்றன. இவை அழற்சி செல்கள் மிகுவதற்குக் காரணம் ஆகின்றன. நுண்குமிழ் ஊடுறுவிகளில் ஒற்றைக்கரு செல்களை விட நிணநீர்செல்கள் குறைவாக இருக்கும்.

இரண்டாம் கட்ட தொற்று நிலைமாறும்போது கூடுதல் பன்னடுக்குக்கரு செல்கள் தோன்றி மேல் இருக்கும் மேற்திசு நசிவடைகிறது.

கீழ்வருவனவற்றில் இருந்து நுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வு அழற்சியை வேறுபடுத்திக் காண வேண்டும்:

 • கண்நோய்
 • ஸ்டெபிலோகாக்கல் விளிம்பு வெண்படல அழற்சி.
 • நுண்ணுயிர்  வெண்படல அழற்சி.
 • கண் வெளிப்படல மேலுறை கணு அழற்சி
 • அழற்சியுற்ற கண்கட்டி.
 • அழற்சியுற்ற போலி இமைமுனைத் திசு வளர்ச்சி.
 • அயல்பொருள் குருணைக்கட்டிகள்.
 • கண்ணழுத்த  அறுவையைத் தொடரும் வடிநீர்க் கொப்புளம்
 • தையல்பின்கட்டி
 • தோல்கட்டி
 • கண்குழல் வீக்கம்

மருத்துவக் கண்காணிப்பின் கீழ் நோய்மேலாண்மை நிகழ வேண்டும்.

பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நிலைமைகளைக் கட்டுக்குள் வைக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அழற்சியுற்ற உள்நாக்கு மற்றும் மூக்கடி சதையைத் தகுந்த வகையில் குணமாக்க வேண்டும். காசநோய் அல்லது ஸ்டெபிலோகாக்கல் ஒவ்வாமை ஊக்கிகள் பாதிக்காதவாறு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். முறையான நுண்ணுயிர்க் கொல்லிகள் மூலம்  இணையாக ஏற்படும் தொற்றுகளைக் குணப்படுத்த வேண்டும். பொதுவான நிலைமைகளைச் சீர்ப்படுத்தாவிடால் நோய் மீண்டும் மீண்டும் ஏற்படக் கூடும்.

நுண்குமிழ் நோயை எதிர் நுண்ணுயிரி மற்றும் எதிர் அழற்சி சிகிச்சையால் கட்டுப்படுத்தலாம். அறிகுறிகள் காட்டாத நோயாளிகளுக்கும் மீண்டும் வருவதைத் தடுக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.

பொதுவான நடவடிக்கைகள்:

 • இமை சுத்தம்: தகுந்த சுத்தத்தைக் கடைபிடித்து இமையழற்சி இருந்தால் அதைக் குணப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கான ‘கண்ணீர் வரா’ ஷாம்புவைக் கிருமிநீக்கிய பஞ்சால் தொட்டு இமை விளிம்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
 • செயற்கைக் கண்ணீர்: அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உராய்வுக் களிம்புகள் அல்லது செயற்கைக் கண்ணீரைப் பயன்படுத்தலாம்.
 • உணவு:  உயிர்ச்சத்து A, C , D மற்றும் சுண்ணாம்புச்சத்துடன் எரிசக்தி நிறைந்த உணவு வழங்க வேண்டும்.
 • நிறக் கண்ணாடி: ஒளிக்கூச்சத்தைத் தடுக்க நிறக் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.
 • வெதுவெதுப்பான ஒத்தடம் மற்றும் நீரால் கழுவுதல்: வெதுவெதுப்பான ஒத்தடமும் உப்புநீரால் கழுவுதலும் இரண்டாம் கட்ட தொற்று இருந்தால் சளிக்கசிவைக் குறைக்கும்.

மருத்துவ சிகிச்சை:

நோய்க்காரணி எதுவாக இருந்தாலும் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் அல்லது சைட்டோஸ்போரின்கள் போன்ற எதிர் அழற்சி மருந்துகளை வெளி நுண்ணுயிர்க்கொலிகளோடு பயன்படுத்தலாம்.

நுண்ணுயிர்க்கொல்லி சிகிச்சை:

எஸ்.ஆரியஸ் மற்றும் பி.அக்னஸ் தொடர்பான நோய்களுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகளான வாய்வழி டெட்ராசைக்ளின் அல்லது எரித்ரோமைசின் பலன் அளிக்கும். பிற சிகிச்சைகள் பலன் அளிக்காவிட்டாலும் இவை மீண்டும் வரும் நேர்வுகளில் பலன் அளிக்கிறது.  எட்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பக்க விளைவுகள் உண்டாகாதவாறு கவனமாக இருக்க வேண்டும். கேட்டிஃபிளாக்சாசின், பேசிட்ராசின் மற்றும் அசித்ரோமைசின் பயன்படுத்தக் கூடிய பிற நுண்ணுயிர்க்கொல்லிகள் ஆகும்.

எதிர் காசநோய் சிகிச்சை:

காச நோயோடு சம்பந்தப்பட்ட பி.கே.சி. நோயாளிகளுக்கு அடிப்படையான தொற்றைப் பரிசோதித்துத் தகுந்த எதிர் காசநோய் மருந்துகளை அளிக்க வேண்டும். நோயாளியின் நெருங்கிய நோயாளிகளும் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை வழங்க வேண்டும்.

எதிர்-ஒட்டுண்ணி மருந்துகள்:

குடற்புழு தொற்றுள்ள நோயாளிகளுக்கு ஒட்டுண்ணிகளுக்கான மெபண்டாசோல் போன்ற மருந்துகளால் சிகிச்சை அளிக்க வேண்டும். இப்பட்டிப்பட்ட நோயாளிகள் இந்த சிகிச்சையால் விரைவாக குணமடைவார். குறைவாகவே மீண்டும் ஏற்படும் வாய்ப்புண்டு. ஒட்டுண்ணிகள் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

எதிர்காளான் மருந்துகள்: காளானால் ஏற்பட்ட தொற்று முறையான  எதிர்காளான் மருந்து சிகிச்சையால் குணமடையும்.

கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் வெளிமருந்துகள்:

கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் வெளிமருந்துகள் எதிர் அழற்சி மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆரம்ப கட்டத்திலேயே கொடுக்கப்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக இவற்றைக் குறைத்து வர வேண்டும். திடீரென நிறுத்தினால் நோய் மீண்டும் வரும். கண்ணழுத்தம் கூடுதல், கண்புரை போன்றவை பக்க விளைவாக உண்டாகலாம்.

சைக்ளோஸ்போரின் A வெளிமருந்து:

சைக்ளோஸ்போரின் A வெளிமருந்து ஒரு நோய்த்தடுப்பு மிதப்படுத்தியாகும். அழற்சி அறிகுறிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

வெண்படலம் பாதிக்கப்பட்டிருந்தால் சைக்ளோபிளெஜிக் மருந்துகள் தேவைப்படும்.

நோய்முன்கணிப்பு

நுண்குமிழ் கண்சவ்வழற்சியில் இலேசான அறிகுறிகளே காணப்படும்; அறிகுறிகள் இன்றியும் இருக்கும். கண்சவ்வில் மட்டுமே உண்டாகும் நோய் தானாகவே வடுக்களின்றி இரண்டு வாரங்களில் குணமடையும். எனினும் திரும்பவும் வருவது பரவலாக உள்ளது.

பொதுவாக நுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சி கரணை ஊடுறுவிகளோடு லிம்பசைப் பாதிக்கிறது.  இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இவை புண்ணாக மாறும். லிம்பஸ் அல்லது வெண்படலத்தில் ஆப்பு வடிவ நார்க்குழல் வடுக்களை ஏற்படுத்தும்.

நுண்குமிழ் கண்சவ்வழற்சி உருவாக்கக் கூடிய சிக்கல்கள்:

 • வெண்படல வளையப் புண் (வெண்படலத்தைச் சுற்றி பன்குமிழ் நசிவு ஏற்படுவதால்)
 • கரணைச் சிதைவு
 • நார்க்குழல் வெண்படல வடு
 • சல்ஸ்மான் கரணைச் சிதைவு
 • வெண்படலம் மெல்லியதாதல்
 • வெண்படல ஓட்டை (அரிது)

நுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சியைத் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்:

 • தொற்று ஏற்பட்ட உள்நாக்கு மற்றும் மூக்குச்சதைக்கு சிகிச்சை அளித்துக் குழந்தையின் பொதுவான உடல்நலத்தை மேம்படுத்துதல்.
 • காசநோய் அல்லது ஸ்டெபிலோகாக்கல் நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு அவற்றிற்குக் காரணிகளுக்கு எதிரான சிகிச்சை.

 • PUBLISHED DATE : Nov 28, 2016
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Nov 29, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.